## இஸ்லாமிய பார்வையில் நான் யார்? (பகுதி - 4)
**நாள்:** 20/06/2026
இறைவனின் பேரருளால், பிறப்பு என்ற பெருநிகழ்வு என் வாழ்வில் நடந்துவிட்டது. இந்த பூவுலக வாழ்க்கையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து நடக்கவிருப்பது ஒன்றுதான் — அது மரணம்!
மரணத்திற்குப் பின் நான் என்ன ஆவேன்? எங்கே போவேன்? இதுவே இன்றைய என் சிந்தனை.
### ‘விண்டவர் கண்டதில்லை; கண்டவர் விண்டதில்லை’
வாழும் மனிதர்களில், இறப்புக்குப் பின் என்ன நடக்கும் என்பதை நேரில் கண்டுவந்து விவரித்தவர் யாருமில்லை. இறந்த பின் தனக்கு என்ன நேர்ந்தது என்று திரும்பி வந்து கூறியவரும் எவருமில்லை.
அப்படியிருக்க, மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையை நாம் எப்படி அறிவது? அங்கேதான் ‘ஈமான்’ மற்றும் ‘யகீன்’ என்ற இருபெரும் தூண்கள் நம்மை வழிநடத்துகின்றன.
இறை வேதமாகிய திருக்குர்ஆன் எதனைச் சொல்கிறதோ, அந்த மறைவான விஷயங்களை (அல்-கைப்) அப்படியே மனப்பூர்வமாக நம்புவதே **‘ஈமான்’ (நம்பிக்கை)** எனப்படுகிறது. அதை நம்புவது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையில் எள்ளளவும் சந்தேகமின்றி உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். அந்த அசைக்க முடியாத பேரறிவும், தெளிவுமே **‘யகீன்’ (உறுதிப்பாடு)** என்னும் நிலையின் முழுப் பொருளாகும்.
**ஈமான் மற்றும் யகீன்:**
* **ஈமான் (Iman):** அல்லாஹ், வானவர்கள், இறைவேதங்கள், இறைத்தூதர்கள், இறுதித்தீர்ப்பு நாள் மற்றும் நன்மை-தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதியின்படியே நடக்கிறது என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை மனதால் ஏற்று, நாவால் மொழிந்து, உடலால் செயல்படுத்துவதாகும்.
> * **யகீன் (Yaqin):** இது ஈமானின் மிக உயர்ந்த, ஆழமான நிலை. உலகியல் கணக்குகளை விடவும், படைத்தவனின் ஆற்றலையும் அவனது வாக்குறுதிகளையும் மட்டுமே அசைக்க முடியாத சந்தேகமற்ற தெளிவோடு நம்பி, தன் வாழ்க்கையை அதற்கேற்ப அமைத்துக் கொள்ளும் உன்னத நிலை.
அழியாத ஆன்மாவும் ‘தன்னை அறிதல்’ பயணமும்
நான் ஏகத்துவக் கொள்கையை (ஓரிறைக் கொள்கையை) மனதார ஏற்றுக்கொண்டவன்; அதை என் வாழ்நாளின் இறுதிவரை அப்படியே கடைப்பிடிக்க ஆசைப்படுபவன். எனவே, எனது ஆன்மா (ரூஹ்) என்றுமே அழிவதில்லை என்பதும், இந்த மரணத்திற்குப் பின் நீண்ட நெடிய, முடிவே இல்லாத ஒரு மறுமை வாழ்க்கை இருக்கிறது என்பதும் என் உள்ளத்தில் ஆணித்தரமாகப் பதிந்திருக்கிறது. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
என்னைப்படைத்த ஏக இறைவன் வகுத்த இந்த இயற்கையின் சுழற்சி முறையை, குறிப்பாக எலும்பும் சதையுமான என்னுடைய இந்த உடலுக்குள்ளும், உள்ளத்திற்குள்ளும் நடக்கும் சூட்சும செயல்பாடுகளை, **“தன்னை அறிதல்”** என்ற ஞானப் புத்தகத்தில் மூழ்கி முத்தெடுத்துப் புரிந்து கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய ஆதி அந்தம் என்ன? நான் தாயின் கருப்பையில் உருவான விதம் எத்தகையது? என்னுடைய கருவறை வாசம் எப்படிப்பட்டது? போன்ற ஆன்மீக ரகசியங்களை, ஓர் ஆன்மீக குரு உணர்வுபூர்வமாக உணர்ந்து எழுதிய எழுத்துக்களின் வழியே இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
என் நோக்கம், ஏதோ அறிவை வளர்த்துக்கொண்டு "நான் ஒரு அறிவாளி" என்று இந்த உலகிற்குப் பறைசாற்றுவதல்ல. முதலில், இந்த உண்மைகளின் அந்தரங்கக் கருத்தை என் உணர்வுக்குள் உள்வாங்க வேண்டும். எனது எஞ்சிய வாழ்நாளில் இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்து, மரணத்திற்குப் பின் வரவிருக்கும் எனது நீண்ட நெடிய மறுமை வாழ்வை வளமாக்கிக் கொள்வது மட்டுமே எனது ஒரே நோக்கம்!
### சூட்சுமம்: மறைந்திருக்கும் அசல் மனிதன்
*(ஆன்மீகக் குருவின் ‘தன்னை அறிதல்’ நூலின் சுருக்கம் — பக்கம் 40)*
நம்முடைய அசல் மனித வடிவம் என்பது ஒளியால் ஆன 'சூட்சுமம்' (ஆன்மீக அகம்/நுட்பமான உயிர் ஆற்றல்) ஆகும். இந்தச் சூட்சுமத்தை உறைவிடமாகக் கொண்டுதான் நம்முடைய தூல உடல் (பஞ்சபூதங்களால் ஆன இந்த வெளிக் காயம்) நிலைபெற்றுள்ளது. சூட்சுமம் என்பது தூய உடலின் உயிராக மிளிர்கிறது; அதன் நிழல் தான் நம் கண்ணுக்குத் தெரியும் இந்தத் தூல உடல்.
தகப்பனின் விந்து வழி முதலில் உருவம் கொள்ளும் இந்தச் சூட்சுமம், தாயின் கர்ப்பப்பையில் நிலை கொள்ளும்போது பருப்பொருள் வடிவப் போர்வையால் போர்த்தப்படுகிறது. தாய் உண்ணும் உணவின் சத்தால் (நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் ஆற்றலால்) சூழ வடிவம் பெற்று, குழந்தையாக உருப்பெறுகிறது.
சூட்சுமமும் சூலமும் (உடலும் ஆன்மாவும்) ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருத்தப்படும் போது, சூட்சுமம் மறைந்து, தூல உடல் மட்டுமே நம் பார்வைக்குத் தெரிகிறது. தூல உடலுக்குச் சுயமாக இயங்கும் தன்மையில்லை. கண்ணுக்குத் தெரியாத அந்தச் சூட்சுமத்தின் இயக்க சக்தியால்தான் இந்த உடல் இயங்குகிறது. எனவே, உடலின் அசைவுகளைக் கொண்டே நாம் சூட்சுமத்தை அறிய வேண்டியுள்ளது.
இந்தச் சூட்சும அகம் ஒளிமயமானது. அகத்தில் எண்ணங்கள் பல கோணங்களில் இருந்து உருவாகின்றன. நம் வாழ்க்கையில் கோடிக்கணக்கான எண்ணங்கள் தோன்றினாலும், அகம் ஒளிமயமாக இருப்பதால், அந்த எண்ணங்கள் அகத்தின் ஒளிக்கதிர்களாகவே இருக்கின்றன. உடல் இருள் அடைந்ததாக (பருப்பொருளாக) இருப்பதனால், ஒளியாக இருந்த வடிவங்கள் உடலுக்குள் வரும்போது கட்டுப்படுத்தப்பட்டு, இருண்ட வடிவங்களாக மாறுகின்றன என்று ஞானிகள் கருதுகின்றனர்.
எங்கும் எல்லாவற்றிலும் ஏகமாக (ஒன்றாக) இருக்கும் இந்தச் சூட்சுமத்தை அறிவதுதான், இறைவனை அறிவதற்கரிய நேர்வழியாகும். இந்தச் சூட்சும உருவமே அசல் மனிதன். இது பஞ்ச பூதங்களுக்குக் கட்டுப்பட்டதல்ல; மனிதனின் ஐம்புலன்களின் அறிவிற்கும் அப்பாற்பட்டது. ஏனெனில், அந்த ஐம்புலன்களையே இயக்கும் மூலசக்தியே அதுதான்!
### குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில்...
இறைஞானம் என்பது இந்தச் சூட்சுமத்தையும், அது இயங்கும் தன்மையையும், அதனை இயக்கும் இறைசக்தியின் பேராற்றலையும் அறிந்து உணர்ந்து கொள்வதே அன்றி வேறில்லை.
அதே நேரத்தில், இஸ்லாமிய மார்க்கத்தின் மையப்புள்ளி என்பது புனித திருக்குர்ஆனும், பெருமானாரின் ஹதீஸ்களும் தான். ஆன்மீக ரீதியாக எந்த ஒரு விஷயத்தை யார் கூறினாலும், அதற்குரிய குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளதா என்ற கேள்வி எழுவது இயற்கை; அது அவசியமானதும் கூட.
எனவே, இந்தத் தன்னை அறிதல் பயணத்தை, மார்க்க வரம்புகளுக்குட்பட்டு, குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் மேலும் ஆழமாகத் தேடிப் பயணிப்போம்...
*(இன்ஷா அல்லாஹ், அடுத்த பகுதியில் சிந்திப்போம்...)*
No comments:
Post a Comment